எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் ரசிகர்கள்..!
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு, மீண்டதன் பின்னரும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், நேற்று தனது 74 ஆவது வயதில் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாரினால் அவர் காலமானர.
அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பி, மீண்டும் பாடல்களை பாடவேண்டும் என்பது உலகெங்கும் உள்ள அவரின் இரசிகர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
5 தசாப்தகால இசை வரலாற்றைக் கொண்ட எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த 51 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், காலமானார்.
அவரின் பூதவுடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது பூதவுடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள். பொதுமக்கள் என பலரும் அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் பூதவுடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவும் ட்விட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறந்த மனிதரான எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவு, தமக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கம்பன்விழா நிகழ்வின் போது ஒரே மேடையில் தானும் அவரும் கௌரவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள குமார் சங்கக்கார, தமது ஆழ்ந்த அனுதாபத்தினை அவரது குடும்பத்தவர்களுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் இடம்பெற்ற கம்பன் விழா நிகழ்வில் கலந்துக்கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், உரையாற்றியிருந்ததுடன், பால பாடல்களையும் பாடியிருந்தார்.