மிகவும் பின்தங்கிய கிராமத்துக்குச் சென்று மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

மிகவும் பின்தங்கிய கிராமத்துக்குச் சென்று மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

மக்களுக்கு இலகுவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாத பிற்போக்கான சிந்தனையுள்ள அரச அதிகாரிகளை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு தான் பின்னிற்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஹல்தமுல்ல வெலன்பிட்ட குமாரதென்ன கல்லூரிக்கு இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விஜயம் மேற்கொண்டார்.

பதுளை மாவட்டத்தின் மொனராகலை பதுளை மாவட்ட எல்லையிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமமாக வெலன்பிட்ட கிராமம் அடையாளப்படுத்தப்படுகிறது.

குறித்த கிராமத்திலிருந்து வைத்தியசாலை மற்றும் அரச அலுவலகங்களுக்கு செல்வதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்களை செலவிடவேண்டியுள்ளது.

குறித்த கிராமத்திற்கு செல்லும் வீதியில் ஒரு தடவையில் ஒரு வாகனம் மாத்திரமே பயணிக்க கூடிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறான பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு சென்ற ஜனாதிபதியை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானோர் அங்கு கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியிலிருந்து ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

வெல்லவாய, பெரகல, வெலன்விட்ட மற்றும் 100 ஏக்கர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வீதியை காபட் வீதியாக செப்பனிட்டு தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பில் ஜனாதிபதி துறைசார் அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த பிரதேசத்திற்கு மின்சார வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு பெரும் தடையாக காணப்படுவது அதற்காக செலவிடப்படவுள்ள 105 மில்லியனுக்கும் அதிகமான தொகையே உடனடியாக மின்சக்தி அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி நிதிஒதுக்கீடுகளை மேற்கொள்வதாகவும் சூழலுக்கு ஏற்புடைய வகையில் நிலக்கீழ் மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தாது இலகுவான முறைகளின் ஊடாக மக்களுக்கான சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்கு இதன் ஊடாக முடியும். அரசியல் வாதிகளும் அரச ஊழியர்களும் மக்களோடு நெருங்கி செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.