எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி: நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம்

பாடகர் எஸ்.பி.பி. உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், ரசிகர்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படாமல் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

நாளை அவரது உடல் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.