புரட்டாதி சனீஸ்வரர் விரதத்தில் தோஷங்கள் நீங்க உண்மையில் நாம் யாரை வழிபட வேண்டும்?

புரட்டாதி சனீஸ்வரர் விரதத்தில் தோஷங்கள் நீங்க உண்மையில் நாம் யாரை வழிபட வேண்டும்?

புரட்டாசி மாதம் என்றாலே பூஜைகள், விரதங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டத் தொடங்கி விடும். புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாட்களுமே தெய்வீக வழிபாட்டிற்கு உரியவை தான்.

12 மாதங்களில் புரட்டாசி மாதம் இறை வழிபாடுகளில் நாம் ஈடுபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறுவோம் என்பது ஐதீகம். அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை மட்டும் அல்ல இந்த தெய்வத்தையும் சேர்த்து நாம் வணங்கினால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அப்படி நாம் யாரை வணங்க வேண்டும்? அவரை வணங்கினால் நமக்கு என்ன நன்மைகள் நடக்கும்?

புரட்டாசி சனிக்கிழமையில் இவரை வணங்கினால் சனி பகவான் நமக்கு கொடுக்கும், அத்தோடு தொல்லைகளிலிருந்து நாம் விமோசனம் பெறுவதாக புராணங்கள் கூறுகிறது.

அவருக்கு அப்படி என்ன சக்தியிருக்கிறது? எப்படி அவருக்கு சனி தோஷத்தை நீக்கும் வாய்ப்பு கிடைத்தது? என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

 

சனி பகவான் மனிதர்களை மட்டுமல்ல தெய்வங்களை கூட விட்டு வைப்பதில்லை என்பது புராணத்தின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் சனிபகவான் பிடிக்கும் நேரம் வரும் பொழுது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல பரிகாரங்களை அவர்கள் செய்கிறார்கள்.

இருப்பினும் சனியின் பிடியிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது அல்லவா? செய்த பாவத்திற்கான தண்டனையை தெய்வமாக இருந்தாலும் அனுபவித்து தான் தீர வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் இந்த தெய்வத்தையும் சனி பகவான் விட்டு வைக்கவில்லை. அவரை பிடிப்பதற்கு அவரிடமே அனுமதி கேட்டார் சனி பகவான்.

சனி பகவானின் தொல்லை தாங்க முடியாமல் என் தலை மீது வந்து அமர்ந்து கொள் என்றாராம் அந்த இறைவன். சரி அவர் யாரென்று இப்போது பார்த்து விடுவோம். அவர் வேறு யாரும் அல்ல, நமக்கு மிகவும் பிடித்த, இஷ்டமான தெய்வமாக விளங்கும் ‘ஆஞ்சநேயர்’ தான்.

 

ஆஞ்சநேயர் தன் தலைமீது சனி பகவானை அமர செய்து விட்டார். உடனே சமயோஜிதமாக யோசித்து ஆஞ்சநேயர் ஒரு பெரிய பாராங்கல்லை தன் வாலின் மூலம் தூக்கி சனி பகவான் தலை மீது வைத்து விட்டார்.

பாரம் தாங்க முடியாத சனி பகவான் தன்னை விடுவிக்குமாறு ஆஞ்சநேயரிடம் மன்றாடினார். அதற்கு ஆஞ்சநேயர் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. மீண்டும் சனி பகவான் மூச்சு வாங்கிக் கொண்டே தன்னை விட்டு விடுமாறு ஆஞ்சநேயரிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அவர், சனி பகவானே, அப்படி என்றால் எனக்கு ஒரு வாக்கு கொடு என்று கேட்டுக் கொண்டாராம் ஆஞ்சநேயர். அவர் அப்படி என்ன கேட்டார் தெரியுமா? என்னையும், என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து வைத்துக் கொண்டாலும் அவர்களை தொல்லை செய்யக் கூடாது என்று வாக்குக் கொடு என தான் சனி பகவானிடம் ஆஞ்சநேயர் நமக்காக வரம் பெற்றுக் கொண்டாராம்.

 

ஆஞ்சநேயரின் கட்டளையை ஏற்ற சனி பகவானும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி விட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை புரட்டாசி சனிக்கிழமைகளில் யாரொருவர் ஆஞ்சநேயரை வணங்குகிறார்களோ அவர்களை சனி தோஷம் இருந்தாலும் அதனுடைய பாதிப்புகள் குறைவாகவே இருக்குமாம்.

சனி பகவான் தரும் இன்னல்களை நாம் அனுபவிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும்? அதிலிருந்து நாம் சற்று ஆசுவாசிக்க புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நிம்மதி கிடைக்கும். இதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது.

 

நீங்களும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுடன், ஆஞ்சநேயரையும் வணங்கி வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும் என்பதே நிதர்சனம்