எஸ்.பி பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் - சற்றுமுன்னர் மருத்துவமனை அறிக்கை

எஸ்.பி பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் - சற்றுமுன்னர் மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

74 வயதுடைய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் ஓகஸ்ட் 5-ம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல் நிலை கடந்த ஓகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.

இந்த நிலையில் தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா நலம் பெறுவதற்கான நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறார். எக்மோ / வென்டிலேட்டர், (ICU) பிசியோதெரபி வாய்வழி திரவங்களுடன் தொடர்கிறது. அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளார் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, எக்மோ கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் எஸ்.பி.பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.