யாழில் அரச செயலகம் - கட்சியின் அலுவலகமாக! நாடாளுமன்றில் அம்பலம்

யாழில் அரச செயலகம் - கட்சியின் அலுவலகமாக! நாடாளுமன்றில் அம்பலம்

யாழ்ப்பாணத்தில் அரச செயலகம் ஒன்று அரசியல் கட்சியின் அலுவலகமாக மாற்றப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் தேர்தல் ஆணைக்குழுவுடைய செயலாற்றுகை தரம் குறித்த பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ்ப்பாணத்தில் அரச செயலகத்தை தன்னுடைய சொந்த அரசியல் செயலகம் போன்று மாற்றியிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரை விசாரிப்பதற்கு இந்த நாட்டிலே யாருமில்லை.

இது மிக மோசமானதொரு நடவடிக்கை. இதனை சொல்லுவதற்கு திராணியில்லாதவர்கள் அதனை சொன்ன இரட்ணஜீவன் ஹீல் மீது ஏன் கோவம் கொள்கிறீர்கள்? தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நியாயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நடைபெறுகின்ற உண்மைகளை மறைக்காமல் நீதியான வழியிலே ஒரு தேர்தல் நடைபெற வேண்டும், நீதியான முறையிலே இந்த நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அங்கிகரிக்கப்பட்ட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் முதலிலே உங்களுக்கு வரவேண்டும்.

நாங்கள் எதையும் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. எதனையும் இனவாத ரீதியாக சிந்திக்கவும் கூடாது.

இரட்ணஜீவன் ஹீல் ஒரு தமிழன் என்பத்திற்காக, அவர் தன்னுடைய நியாயங்களை சொன்னதற்காக இங்கு அவர் மீது பலர் வசைமாரிகளை பொழிந்தீர்கள்.

ஆனால் அவருடைய கல்வித் தன்மை, அவரிடம் உள்ள ஆற்றல், அவருக்கு இருக்கிற ஆங்கில அறிவு, அவரிடம் உள்ள கெட்டித்தனத்தை நீங்கள் முதல் மதிக்கப்பழகுங்கள்.

அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல. அவர் தமிழர்களுக்கு சாதகமாக இருந்தாரா? பாதகமாக இருந்தாரா? என்பது முக்கியமல்ல.

இந்தச் சபையிலே ஒரு தமிழன் தூற்றப்படுகின்ற பொழுது, பிழை இல்லாமலே பிழை சொல்லப்படுகின்ற பொழுது நாங்கள் பேசாமல் இருப்பதும் ஒரு காலத்தின் தவறு. ஆகவேதான் நான் இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.

உண்மையில் இரட்ணஜீவன் ஹீல் பிழை செய்திருந்தால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாக அவர் அதனை சொல்லியிருக்க வேண்டும்.

இந்தச் சபையிலே இரட்ணஜீவன் ஹீல் இல்லாத இடத்திலே அவரைப் பற்றி நீங்கள் பேசுவது உங்களுடைய தகுதியை, உங்கள் இனத்தினுடைய தன்மையை நீங்கள் குறைப்பதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.