சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த'. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. நவம்பரில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ரஜினி இல்லாத காட்சிகள்தான் முதலில் படமாக்கப்பட இருக்கிறார்கள். ஜனவரியில் ரஜினி கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணன் தங்கை சென்ட்டிமென்ட் படமான 'அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பு, மீனாவும் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி கேரக்டரில் சூரியும், சதீஷூம் நடிக்கிறார்கள்.
இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான, 'பன்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது, அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பன்ச்' வசனங்களை எழுதியுள்ளார். அதை, போனிலேயே, இயக்குனர் சிவாவிடம், தன் ஸ்டைலில் ரஜினி பேசிக் காட்டியுள்ளார். அவற்றை மிகவும் ரசித்த சிவா, 'இந்த, 'பன்ச்' வசனங்களும், உங்களது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்...' என்று கூறியுள்ளார்.
மசாலா கதைகளாகவே அதிகமாக நடித்து வந்துள்ள ரஜினி, அண்ணாத்த படத்தில் மசாலாவை குறைத்து, 'சென்டிமென்ட்' அதிகமாக கலந்த கதையில் நடித்து வருகிறார். அதனால், இந்த படத்தில், ஆரம்ப கால ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று சொல்லும் அப்படக்குழுவினர், 'தியேட்டர்களில் எப்போதுமே, ரஜினியைப் பார்த்து, கை தட்டி ஆரவாரம் செய்யும் ரசிகர்கள், இந்த படத்தின், 'கிளைமாக்சை' பார்த்து, கண்கலங்கியபடி வெளியேறுவார்கள்...' என்று சொல்கின்றனர்.