55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்த சிவகுமார்

55 வருடங்களுக்கு முன்பு வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்த சிவகுமார்

சிவகுமார் நடிகராவதற்கு முன்பு ஓவிய கல்லூரியில் பயின்றார். ஓவியராகவும் பணியாற்றினார். அப்போது சென்னை புதுபேட்டையில் தங்கி இருந்தார். அந்த பழைய வீட்டை தற்போது நேரில் சென்று பார்த்து அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

புகைப்படத்தின் கீழே, “1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு இது. 7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான் எனது அத்தனை ஓவியங்களும். இந்தியாவில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500. குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள். பொன்னான நாட்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

இது குறித்து சிவகுமார் கூறும்போது, “சென்னையில் 55 வருடத்துக்கு முன்பு 7 வருடங்கள் நான் வாழ்ந்த இந்த வீட்டை என்னுடைய தாஜ்மகால் என்பேன். இந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசைப்பட்டேன். எனது மனைவியுடன் சென்று பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த வீடு அப்படியேதான் உள்ளது. யாரும் குடியில்லாமல் பூட்டிக்கிடக்கிறது.” என்றார்.