பொதுத்தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் வெளியான தகவல்
உத்தேச பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் அளவில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழு இன்று கூடவுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய காரணிகள் குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் மனுக்களை இரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்தநிலையில் உத்தேச பொதுத்தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. அதேநேரம், பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர்; கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தேச பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னர் அந்த வர்த்தமானியை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.