சாதனை படைத்த விஜய்யின் செல்பி.... கொண்டாடும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிவ்மோகா, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக நெய்வேலியில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதுதான், விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது.

 

இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு விஜய் அழைத்து வரப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

 

தினந்தோறும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடிவந்த நிலையில், வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதை அறிந்த விஜய் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி கூட்டமாக நின்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த செல்பி விஜய்யின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டதும் வைரலானது. ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் இந்த செல்பியை பகிர்ந்தார்கள். 

 

இந்நிலையில், விஜய்யின் இந்த செல்பி புகைப்படம் டுவிட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்திய அளவில் அதிகம் பேர் ரீ-டுவிட் செய்த டுவிட் இதுதானாம்.

 

இதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் வெளியிட்ட டுவிட் தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது அதைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வெளியிட்ட டுவிட் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.