தொழில் வயதெல்லை குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி!

தொழில் வயதெல்லை குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி!

நபர் ஒருவரை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 16 ஆக நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 16 வயது வரை கட்டாய பாடசாலை கல்வி என்ற ரீதியிலான சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2020 ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டங்கள் மற்றும் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த சட்ட மூலம், திருத்த சட்ட வரைபு பிரிவினால் வகுக்கப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வெளியிடப்பட்ட உத்தரவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை, தவறு செய்யும் சிறுவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதற்கான வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் இளம் பராயத்தினர் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, 14 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என்ற ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இளம் குற்றவாளிகள், பயிற்சி பாடசாலை தொடர்பான கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக 16  முதல்  22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்ற ரிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 16 வயதிற்கு குறைந்த சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் மூலம் நல்வழிப்படுத்தும் செயற்பாடுகளுக்காக நன்னடத்தை திணைக்களத்தினால் உறுதி செய்யப்பட்ட நன்னடத்தை பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் சிறைச்சாலைகளில் அடைத்தல் அல்லது இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்த நிலையில்,  சிறுவர் உரிமை தொடர்பான பிரகடனத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய 18 வயதிற்கு குறைந்தவர்களை சிறையில் அடைத்தல், தண்டனை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,  இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.