பண்டாரவன்னியனுக்கு சிலை அமைத்த விவகாரம்! நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பண்டாரவன்னியனுக்கு சிலை அமைத்த விவகாரம்! நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு படிக்கட்டுகள் அமைத்த விவகாரம் தொடர்பாக குழு ஒன்றினை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக வவுனியா நகரசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்டசெயலகத்தின் முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு படிக்கட்டுகள் அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியன் சிலையை உரு மறைப்பு செய்யும் வகையிலும் சிலையின் தனித்துவத்தினை அழிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களால் விசனம் வெளியிடப்பட்டு வந்தது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வில் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.சேனாதிராஜா குறித்த சிலைக்கு படி அமைத்த முறை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. எனவே நகரசபை இதற்கு தீர்க்கமான முடிவோன்றினை எடுக்கவேண்டும் என்று தெரிவித்ததுடன், பொது அமைப்பு ஒன்று தமது செலவில் அதற்கான புதியபடிக்கட்டினை அமைத்து தருவதாக சொல்கின்றனர். அதற்கு நகரசபை நிர்வாகம் சம்மதத்தினை எதிர்பார்த்து நிற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றினை அமைத்து பண்டார வன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினையும் இணைத்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு அதற்கான தீர்க்கமான முடிவினை எடுக்கமுடியும் என்று தவிசாளர் தெரிவித்ததுடன், அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.