ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு - அடித்துக் கூறும் சிரேஷ்ட பேராசிரியர்

ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு - அடித்துக் கூறும் சிரேஷ்ட பேராசிரியர்

தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ்மொழியே ஸ்ரீலங்காவின் தொன்மையான மொழியெனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியரும், வரலாற்றுத்துறை, தொல்லியல்த்துறைத் தலைவரும், ஸ்ரீலங்காவின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான மத்திய கலாசார நிலையத்தின் தொல்லியல் பணிப்பாளருமான பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதனை சிங்கள அறிஞர்களே சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனரென இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு,

01. கிழக்கு மாகாணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள தொல்லியல் செயலணி தொடர்பான தங்களின் கருத்து என்ன?

ஸ்ரீலங்காவில் பிரித்தானியரின் ஆட்சிக்காலம் தொடக்கம் ஒரு தொல்லியல் திணைக்களம் இயங்கி வருகிறது.

அந்தக் காலம் தொடக்கம் ஒரு தொல்லியல் சான்றை அல்லது மரபுச்சின்னத்தைப் பேணிப் பாதுகாக்கின்ற பொறுப்பு அதன் பணிப்பாளர் நாயகத்திற்கே உரியது. அவருடைய மேலாண்மையின் கீழ் உதவிப் பணிப்பாளர்கள், அகழ்வாராட்சியாளர்கள் இருப்பார்கள்.

அதுபோல கல்வெட்டு, நாணயவியல், வெளியீடுகள் போன்றவற்றிற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

தொல்லியல் சின்னங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு அல்லது அதற்குச் சேதம் ஏற்படுத்துவதைக் கண்காணிப்பதற்குத் தனியான ஒரு பொலிஸ் பிரிவும் இருக்கிறது.

ஆனால் கிழக்கு மாகாணத்திற்கெனத் தனியான ஒரு தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது அது குறித்த எந்தத் தகவலும் எமக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை.

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எங்கே செய்யப் போகிறார்கள்? என்னென்ன மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப்போகிறார்கள்? என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. அது தொடங்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் போது தான் அது குறித்துச் சொல்ல முடியும்.

அப்போது தான் தெரியும் அவர்கள் குறித்தவொரு சமூகத்தின் தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாக்கப் போகிறார்களா? அல்லது பல்லினப் பண்பாடு கொண்ட கிழக்கிலங்கையின் அனைத்து மக்களுடைய மரபுரிமைகளையும் பாதுகாக்கப் போகிறார்களா? என்று.

ஆனால் குறித்த செயலணியின் சிங்களவர் ஒரு சிலரால் கிழக்கிலங்கையின் எல்லா சமூகத்தினரதும் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் என்றே கருத்துச் சொல்லப்படுகிறது. அதன் உண்மை நிலை என்ன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

02. கிழக்குச் செயலணியில் தமிழ் மக்கள் இணைத்துக் கொள்ளப்படாமையை எவ்வாறு பார்ப்பது?

எனக்கும் அதுவொரு ஆச்சரியமான விடயமாகத்தான் தெரிகிறது. ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்களத்தில் சிங்கள தொல்லியல் ஆய்வாளர்களும், அறிஞர்களும் பணியாற்றுவதைப் போலத்தமிழ் ஆய்வாளர்கள்களும், அறிஞர்களும் பணியாற்றுகிறார்கள்.

தென்னிலங்கையின் தொல்லியல் சார்ந்த பட்டப்படிப்புக்களில் தமிழ் மாணவர்களும் கற்றுப் பட்டதாரிகளாக வெளியேறியிருக்கிறார்கள்.

தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் தமிழ் பட்டதாரிகளை மேற்படிப்புகளுக்காக இணைத்துக் கொள்கின்றன.

இந்நிலையில் கிழக்குச் செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் என்னவெனத் தெரியவில்லை. காலப்போக்கில் தெரியவரும் என நினைக்கிறேன் .

03. "கிழக்குச் செயலணியில் சேர்த்துக் கொள்ளத்தக்க நிபுணத்துவம் மிக்க தமிழ்ப் பிரதிநிதிகள் யாரும் இல்லை.” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அப்படி நிபுணத்துவம் மிக்க யாரும் இல்லையென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொன்னதாக நான் பார்க்கவில்லை. ஆனால் செயலணியில் சேர்ப்பதற்குப் பொருத்தமானவர்களைத் தான் தேடிக்கொண்டிருப்பதாக அவர் சொல்லிய செய்தியொன்றை நான் பார்த்தேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு செயலணி தொடங்குகின்ற பொழுது Terms of Reference என்பது மிக முக்கியமானது. அதாவது என்னென்ன மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப் போகிறார்கள் அல்லது ஆவணப்படுத்தப் போகிறார்கள்? அது எப்படி மீளுருவாக்கம் செய்யப்படப்போகிறது? போன்ற விடயங்கள் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீலங்காவிலே பௌத்த மதம் அல்லது பௌத்த பண்பாட்டுக்கு முன்னரே ஒரு தொன்மையான பண்பாடு கொண்ட பல இடங்கள் கிழக்கிலங்கையிலே இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன .

அவற்றையெல்லாம் கணக்கில் எடுப்பார்களா? அல்லது குறிப்பிட்ட சில மரபுரிமைச் சின்னங்களை மட்டும் கணக்கில் கொள்வார்களா? எதுவும் தெரியாது. இப்படியொரு நிலையில் அதில் தமிழர்களை இணைந்துக்க கொள்வது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை.

அதேபோல அதனுடைய உருவாக்கம், பின்னணி போன்ற தெளிவின்மையால் நிபுணர்கள் அதில் கலந்துகொள்வதற்குத் தயங்கலாம். அது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

அப்படித் தமிழ் நிபுணர்கள் இல்லையென்று யாராவது கூறினால் அது மிகவும் தவறான கூற்று. இத்தகைய நிலையில் இதில் பங்கு கொள்ள நிபுணர்களுக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம் . அது அவரவரின் சொந்த நலன், விருப்பு சார்ந்தது.

04. தமிழர்கள் ஸ்ரீலங்காவின் ஆதிக்குடிகள் என்ற விடயத்தைப் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டமையானது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? அல்லது தமிழர்கள் ஸ்ரீலங்காவின் ஆதிக்குடிகள் என்பதற்கான வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளாக எதனைக் கருதலாம்?

ஸ்ரீலங்காவில் தமிழர்கள் முதலில் வந்தார்களா? சிங்களவர்கள் வந்தார்களா? என்ற பிரச்சினை மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இது பாளி மற்றும் தமிழ் இலக்கியங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு சொல்லப்படுகின்ற ஒருவாதம்.

ஆனால் தமிழ், சிங்கள மக்கள் அனைவருமே இன அடிப்படையில் ஒன்றுபட்ட மக்கள், மொழி பண்பாட்டு அடிப்படையில் வேறானவர்கள் என்பது தான் தொல்லியல், மானுடவியல், வரலாற்று ,மொழியியலாளர்களுடைய கருத்து.

விக்னேஸ்வரன் ஐயா சொன்ன கருத்து ஒரு புதிய விடயமல்ல. ஏனென்றால் இவருக்கு முன்பாகவே தென்னிலங்கைச் சிங்கள அறிஞர்கள் பலர் “தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்” என்பதையும், “தமிழ்மொழி தொன்மையான மொழி” என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

பேராசிரியர் குணத்திலக தமிழர்களின் அகழ்வு பற்றிக் குறிப்பிடும் போது “ஆழமாகத் தோண்டிக் கொண்டு சென்றால் அது தமிழர்களுக்குச் சாதகமாகவும், அகலமாகத் தோண்டிக் கொண்டு போனால் அது பௌத்த சிங்களவர்களுக்குச் சாதகமாகவும் அமையும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோல மூத்த தொல்லியல் அறிஞர் சேனக்க பண்டாரநாயக்க“விஜயன் யுகத்திற்கு முன்னரே ஒரு வளமான நாகரிகம் இருந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா மக்களிடையே உடற்கூற்றியல் வேறுபாடுகள் இல்லை, பண்பாட்டு வேறுபாடுதான் உண்டு. அந்தப் பண்பாட்டு வேறுபாடுகளை விஜயன் வருகைக்கு முன்னரான பண்புகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.” என குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் சத்தமங்கள கருணாரத்ன “1962ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு பௌத்த மதத்தோடு சேர்ந்து மொழியும், எழுத்தும் வருவதற்கு முன்னரே தமிழ்நாட்டுக்குரிய எழுத்துவடிவம் செழிப்பாக இருந்திருக்கிறது . ” என குறிப்பிடுகிறார்.

பின்னாளில் இந்தக் கருத்தைப் பேராசிரியர் பெர்ணான்டோ, கலாநிதி ஆரிய அபயசிங்க போன்றவர்களும், சிங்கள எழுத்து நெடுங்கணக்கை ஆராய்ந்த அறிஞர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இத்தனைக்கும் மேலாக கலாநிதி விக்கிரபாகு கருணாரத்தின அவர்களே “தமிழர்கள் தான் இலங்கையின் பூர்வீகக் குடிகள்” என்று கூறுகின்றார்.

அப்படி இருக்கையில் சபாநாயருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வில் இதனை ஒரு விடயமாகச் சொல்லாமல், ஸ்ரீலங்காவின் தொல்லியல், எமது கலாசாரம், பண்பாடு தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களில் பேசியிருக்கலாம். மற்றும்படி அவர் சொன்னதில் எந்தத் தவறும் கிடையாது. அது தான் நிதர்சனமான உண்மை.

05. கிழக்கு மாகாண மக்களின் தமிழ்த் தேசியம் சார்ந்த நிலைப்பாடு தற்போது எவ்வாறு உள்ளது?

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல பொதுவாக வடக்கு கிழக்கு தழுவியதாகவே தமிழ் தேசியத்தில் பாரியளவு சரிவு ஏற்பட்டுள்ளது. எனக்கு நேரடி அரசியலில் அவ்வளவு ஆர்வம் கிடையாது.

ஆனாலும் இந்தமுறை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கின்ற போது தமிழ் தேசியம் சார்ந்து அதனுடைய வீச்சு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

அதற்குக் காரணம் தமிழ் தேசியம் சார்ந்து பேசும் கட்சிகளுடைய பலவீனம் அல்லது அவர்களின் செயலின்மை தான் தேர்தலில் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகளை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடிவதில்லை.

இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். மக்களும் பல பொருளாதார சிக்கல்கள், பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவர்களின் மனோ நிலையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் பேசுவதில் பல அச்ச நிலைமைகள் உண்டு. ஆனால் வடக்கில் அவ்வாறில்லை. ஆனாலும் வடக்கில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில்‘தமிழ் மக்களை வழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் எந்த முகாந்திரமும் கிடையாது. அதுபற்றிய ஆர்வமோ கொள்கைப் பிரகடனங்களோ கிடையாது.

அது தேர்தல் காலங்களில் மட்டுமென்றில்லாமல், சாதாரண நிலமைகளிலும் அதற்கான ஒரு செயலணியை உருவாக்கி, அவற்றினை நாம் ஆவணப்படுத்திப் பாதுகாக்கலாம்.

தென்னிலங்கையில் அவர்கள் தங்களது மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் என்றில்லாமல் சாதாரண மக்களும் அதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அதனைப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொதுநிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன.

ஆனால் தமிழ் பாடசாலைகளில் ஒரு பாடசாலையில் கூட அந்தந்தக் கிராமத்தின் வரலாற்று மரபுரிமைச் சின்னங்கள் கூட பாதுகாக்கப்படுவதில்லை.

அதுபோல நைனாதீவில் உள்ள ஒரு ஆலயத்தைத் தவிர வேறெந்த ஆலயங்களிலும் இது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாகத் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பல இடங்களில் அவதானிக்கிறேன்.

தென்னிலங்கையில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை விற்பதற்கென்றே பல கடைகள் உள்ளன. அதற்கான காரணம் இது தொடர்பான விழிப்புணர்வு சாதாரண மக்களிடையே ஏற்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனம் என அவர் தெரிவித்துள்ளார்.