நள்ளிரவில் இடம்பெற்ற அனர்த்தம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்

நள்ளிரவில் இடம்பெற்ற அனர்த்தம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து, விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை சேதப்படுத்தியதுடன் வீடு மற்றும் பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக வீட்டின் உரிமையாளாரால் அதிகாரிகளிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் சிவலிங்கம் சிவரூபன் கருத்து தெரிவிக்கையில்,

நள்ளிரவு வேளை வீட்டின் முன்பக்க சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த யானை ஒன்று அங்கு அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளது.

இதன்போது வீட்டில் நின்ற பயன்தரும் மரங்களையும் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளது.

நாங்கள் ஐந்து பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளோம்.

ஆறுமுகத்தான் புதுக்குளத்திற்கு 18 கிலோ மீற்றர் நீளமான பகுதிக்கு காட்டுயானை வேலி அமைத்துத்தருமாறு பல தடவைகள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டும் இன்று வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

பல்வேறு அச்சத்துடன் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு மத்தியில் வசித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.