இரட்டைக் குடியுரிமை விவகாரம் – இரு வேறு நிலைப்பாடுகளுடன் பரிந்துரை முன்வைப்பு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்ககூடாது எனவும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவருக்கு அது பொருந்தக்கூடாது எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளையும், அவதானிப்புகளையும் முன்வைப்பதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு ஒன்றினை பிரதமர் நியமித்திருந்தார்.
குறித்த குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அவசர சட்டமூலம் முன்வைப்பதற்கான வாய்ப்பை நீக்குமாறும், சட்டமூலமொன்றை முன்வைத்தால் அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு மக்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 19 இன் பிரகாரம் தக்கவைத்துக்கொள்ளுமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.