ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினரின் குற்றச்சாட்டு
வவுனியா - வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், அதனை தடுப்பதற்கான செயற்பாடுகளை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆலயத்திற்கு செல்வதும், வழிபாடுகளை மேற்கொள்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என நெடுங்கேணி காவல்துறையினர் நேற்று மாலை தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவிய போது
இதன்போது பதிலளித்த அவர், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில், தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் ஆலய தரப்பினர் செயற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் முன்னதாக வழக்கு தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்டார்.
இதற்கமைய, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி உள்நுழைய முடியாது என்பதற்கு அமைய, ஆலய தரப்பினருக்கு நேற்றைய தினம், அறிவுறுத்தலை வழங்கியதாகவும் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில், வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
நெடுங்கேணியில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், ஆரம்பக்காலம் முதல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும், தொடர்ச்சியாக உற்சவம் நடத்தப்பட்டு வருவதுடன், நித்திய பூசைகளையும் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஆலயத்திற்கு செல்லும் பாதையானது, சீரற்று இருந்தமையினால், ஆலய நிர்வானத்தினரின் கோரிக்கைக்கு அமைய, பிரதேச சபையினால் கொங்கிறீட் படிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு குறித்த விடயத்தில் தலையிட்டுள்ள தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சிறப்புரிமை மிக்க பகுதிக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், ஆலய உற்சவத்திற்கும் தடை விதிப்பதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.