இ.போ.சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் போராட்டம்

இ.போ.சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் போராட்டம்

இலங்கை அரச போக்குவரத்து சபையின், மன்னார் சாலை பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் அரச போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள, தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை, மன்னார் நகர சபை நேற்றிரவு முன்னறிவித்தல் இன்றி மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து தரிப்பிடம், பொது பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு அரச மற்றும் தனியார் சேவைகளை இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னதாக போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை கைவிட்டு, புதிய பேருந்து தரிப்பிடத்தில் சேவைகளை தொடர்வதற்கு நகர சபையினால், கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அரச போக்குவரத்துச் சேவைகள், தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்ததன் காரணமாக, நேற்றிரவு குறித்த இடத்தை மூடுவதற்கு நகர சபை நடவடிக்கை மேற்கொண்டதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.