புத்திஜீவிகளிடம் கோட்டாபய முன்வைத்துள்ள கோரிக்கை

புத்திஜீவிகளிடம் கோட்டாபய முன்வைத்துள்ள கோரிக்கை

அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வியத்மக அமைப்பில் அங்கம் வகிக்கும் அறிஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேடமாக அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை தயாரிக்கும் பொறுப்பு வியத்மகவிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் முனைவோரின் இணைவாக வியத்மக அமைப்பு 2016 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, மக்களின் அரசியல் சமூக சிந்தனையில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதன் ஊடாக முடிந்துள்ளது.

வியத்மக அமைப்பின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதன் உறுப்பினர்களை ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் நேற்றைய தினம் முதன் முறையாக சந்தித்தார். எத்துல்கோட்டையிலுள்ள வியத்மக காரியாலயத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

சகல இன மக்களையும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கி ராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய விதம் தொடர்பில் ஜனாதிபதி வியத்மக நிறைவேற்று குழுவிற்கு தெளிவுபடுத்தினார்.

உபகுழுவொன்றை ஸ்தாபித்து யோசனைகள் மற்றும் திட்டங்களை ராஜாங்க அமைச்சுக்களுக்கு வழங்கி எதிர்கால செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க முடியும்.

அமைச்சரை சந்திக்கும் போது ஏற்படும் நெருக்கடி நிலைகளின் போது ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைப்பு வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சகல அபிவிருத்தி செயற்பாடுகளின் போதும் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கூடிய வகையில் செயற்படவேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பிரதேச மட்டத்தில் கொள்கை வகுக்கும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கமுடியுமா என்பது குறித்தும் ஜனாதிபதி அவதானம் செலுத்தினார். பல்வேறு துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் தேவை குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ராஜாங்க அமைச்சர்களான அஜிட்நிவாட் கப்ரால், கலாநிதி நாலக்ககொடஹேவா, சரத்வீரசேகர, விசேட வைத்திய நிபுணர் சீத்தா அரம்பேபொல உள்ளிட்டோரும் குறித்த கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.