இராணுவ வீரர் ஒருவருக்கு பொலிஸார் வலைவீச்சு
ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொல்லால் தாக்கி, காயப்படுத்தி அவர் வசமிருந்த ரூபா 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உட்பட்டவர் பரஸங்கஸ்வெவ, கந்துருகஸ்தமன பகுதியில் வசிக்கும் கே.ரணதுங்க ( 57 ) என்ற ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தராவார்.
இவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
பரஸங்கஸ்வெவ, ரத்மலை பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவருக்கு ஏற்கனவே வழங்கியிருந்த பணத்தை சம்பவம் நடைபெற்ற அன்று பெற்றுக் கொண்டு வீடு நோக்கி சென்ற போதே பாதையில் வைத்து பொல்லால் தாக்கி, தம்மை காயப்படுத்தி தமது பணத்தை கொள்ளையடித்ததாக பாதிக்கப்பட்ட நபர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
சந்தேக நபர் பரசங்கஸ்வெவ பகுதியில் வசிப்பவர் எனவும், தலைமன்னார் பகுதி இராணுவ முகாம் ஒன்றில் சேவையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.