கோட்டாபயவின் தலைமை வெற்றியின் சகாப்தம் - விமல் புகழாரம்

கோட்டாபயவின் தலைமை வெற்றியின் சகாப்தம் - விமல் புகழாரம்

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான சகாப்தம் வெற்றியின் சகாப்தம். அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் சுபீட்சத்திற்குமான வெற்றி யுகம் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

பச்சை யுகம் கடந்த நாலரை வருடங்கள் நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளதென குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் 1.7வீதமாக வீழ்ச்சியடைந்ததையும் குறிப்பிட வேண்டும் என்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குடும்ப ஆட்சி போன்ற பழைய கதைகளுக்கு இனி நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். பச்சை யுகத்தில் தான் மிக மோசமான மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்றது. சஹ்ரானுக்கு இடம் கொடுத்து நாட்டு மக்கள் 300 ற்கு மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொடுத்ததும் அந்த ஆட்சி தான்.

இப்போது குடும்ப ஆட்சி என கூறி மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்.உள்ளூர் விவசாயிகளின் வயிற்றிலடித்து சர்வதேசத்திற்கு சம்பாதித்துக் கொடுத்த ஆட்சி அதுவாகும்.

அவர்கள் நாட்டில் முறையான ஆட்சி நடத்தி இருந்தால் இவ்வளவு விரைவாக மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்க மாட்டார்கள்.

அவர்களது ஆட்சிக் காலத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வந்திருக்குமானால் இலங்கையானது எமது அயல் நாடான இந்தியாவை விட மோசமான பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும். தற்போது எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் உலகிற்கே முன்மாதிரியாக சர்வதேச ரீதியில் பிரசித்தப் படுத்தப்படுகின்றன.