கண்ணீர் மல்க விடை பெற்றார் வடிவேல் பாலாஜி

மாரடைப்பு காரணமாக நேற்று மரணமடைந்த தொலைக்காட்சி புகழ் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேல் பாணியில் நகைச்சுவைகள் செய்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர். அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்தன. கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி நேற்று மரணம் அடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சவுந்தரராஜா, ரோபோ சங்கர், தாடி பாலாஜி சின்னத்திரை நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் ஆழந்த இரங்கலை தெரிவித்தார்கள். 

 

வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் 3 மணியளவில் தொடங்கியது. சின்னத்திரை நடிகர்கள் உட்பட பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். அவரது உடல் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதியாக கண்ணீர் மல்க வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.