வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 28சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா- குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே போக்குவரத்து வீதி வழிமுறைகளை பின்பற்றத்தவறிய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று (வியாழக்கிழமை) மாலை குருமன்காடு சந்தியில் போக்குவரத்து பொலிஸார், வீதி வழிமுறைகளை மீறி மோட்டார் வாகனம் செலுத்திய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுத்துள்ளது என காமினி திஸாநாயக்க கூறினார்.
மேலும், தலைக்கவசம் இன்றி கைத்தொலைபேசி பாவித்தல், காப்புறுதி ஆணவம் இன்றி, மோட்டார் அனுமதிப்பத்திரம் இன்றி, மதுபோதையில் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 24 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நகரில் முன்னெடுக்கப்படும். எனவே பொது மக்கள், சாரதிகள் போக்குவரத்துப் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் காமினி திஸாநாயக்க கேட்டுக்கொண்டார்.