தீப்பற்றிய கப்பலுக்குள் திடீரென நுழைந்த மூவர் -ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்ட தகவல்

தீப்பற்றிய கப்பலுக்குள் திடீரென நுழைந்த மூவர் -ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்ட தகவல்

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன்ட் கப்பலுக்குள் மூவர் திடீரென சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. மீட்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவரே கப்பலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கப்பல் காணப்படும் இடத்தில் எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது. இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த எண்ணெய்ப் படிவுகள் இந்த கப்பலில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணெய் அல்ல எனவும், கப்பல் பயணத்துக்கு பயன்படுத்தப்பட்ட டீசல் எண்ணெயாக இருக்கலாம் எனவும், கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆராய நீர்மூழ்கி வீரர்களை ஈடுபடுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை அளவில் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த கப்பல் தற்போது சங்கமன்கண்டி பிரதேசத்தில் இருந்து 41 கடல்மைல் தொலைவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது