பெரும் கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்த பிரச்சினை! சபாநாயகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

பெரும் கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்த பிரச்சினை! சபாநாயகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

தன்னுடைய ஒழுங்கு பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் சபாநாயகர் செவிமடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்திய நிலையில், இந்த வாதவிவாதங்கள் ஏற்பட்டன.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பினை வெளியிட்டதோடு, இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை கேள்வியை எழுப்பியிருந்தார்.

எனினும் இது தொடர்பில் சபாநாயகர் அவதானம் செலுத்தவில்லை என லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றம் கூடியபோது குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் பிரேமலால் ஜயசேகர பதவியேற்ற சந்தர்ப்பத்தில் நான் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன். எனினும் நீங்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. நான் அவர் பதவியேற்பதற்கு முன்னதாக ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன் எனினும் நீங்கள் அவர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் சட்ட பிரச்சினையை எழுப்புமாறு கோரினீர்கள்.

அது மிகவும் பிழையான விடயம். நாடாளுமன்ற சம்பிரதாயங்களை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பும்போது அதற்கு செவி சாய்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆகவே நீங்கள் எனக்கு வாய்ப்பு தந்திருக்க வேண்டும். ஆகவே நீங்கள் எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்வது அவரது சிறப்புரிமை எனவும், அதில் குறுக்கீடு செய்ய முடியாது எனவும் பதிலளித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் மேற்கொள்வது விசேடமான ஒரு தருணமாகும். ஆகேவ அந்த சந்தர்ப்பத்தில் வேறு விடயங்களில் அவதானம் செலுத்துவது சரியான விடயமாக அமையாது எனவும் தெரிவித்தார்.

எனினும் மீண்டும் கருத்து வெளியிட்ட லக்ஸ்மன் கிரியெல்ல, ”வேறு விடயங்கள் தொடர்பில் நான் பேசவில்லை. நான் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன். நீங்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.” என வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை ஹன்சார்ட்டில் இருந்து நீக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் வழக்குத் தொடர்பில் பேசவில்லை. வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தோம். அதன் பின்னர் நீங்கள் தெரிவித்த விடயத்தின் மிகுதியை நாம் தெரிவித்தோம். எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எங்களுடைய கருத்துக்களை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார்.

நீங்கள் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவீர்கள் என நினைக்கின்றோம். நிலையியற் கட்டளை 21இன் கீழ் கருத்து வெளியிட்டோம். ஆகவே நீங்கள் ஹன்சார்டில் இருந்து அதனை நீக்கமாட்டீர்கள் என நினைக்கின்றோம்.

இதன்போது லக்ஸ்மன் கிரியெல்லவின் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் சபாநாயகர் ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்படாமல் நடுநிலையாக செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் நீங்கள் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர், என்னுடைய பாடசாலையில் படித்தவர். எனினும் உங்களுக்கு தற்போது காணப்படும் பிரச்சினையை நாம் அறிவோம். நீங்கள் சுயாதீனமாக செயற்படுவீர்கள் என நினைக்கின்றோம்.

நீங்கள் 145 பேருக்கும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கும் மாத்திரம் உரித்துடையவர் அல்ல. நீங்கள் 225 பேரில் ஒருவர். 58.9 வீத வாக்குகளே அவர்கள் பெற்றுள்ளனர். இது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.