சவுதியில் இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம்
சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறும் இலங்கைப் பணியாளர்களிடமிருந்து எந்தவித கட்டணத்தையோ அல்லது தண்டப்பணத்தையோ அறவிடாமல் இருப்பதற்கு அந் நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தின் மூலம் சவுதி அரேபியாவில் பணிபுரிவதற்காக சென்ற இலங்கைப் பணியாளர்கள் எந்தவித அபராதத்தையோ, கட்டணத்தையோ செலுத்தாமல் தாயகம் திரும்பமுடியும்.
விசா காலாவதியானவர்கள், கொவிட்-19 நெருக்கடி காரணமாக திரும்ப முடியாதிருந்தவர்கள் அடங்கலாக சகல இலங்கைப் பணியாளர்களும் சவுதி விமான நிலையங்களின் ஊடாக வெளியேற முடியும்.
இவ்வாறு வெளியேறும் சமயத்தில், அவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமோ, அபராதமோ அறவிடப்பட மாட்டாதென சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கொவிட்-19 நெருக்கடியால் எதிர்கொண்டுள்ள இடர்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தற்காலிக ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான வலுவான இருதரப்பு உறவுகளை கௌரவிக்கும் விதத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கணிசமான நிவாரணத்தை வழங்குவதாகவும் சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில், புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமைக்காக சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு, இலங்கை அரசாங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.