போதைக்கும்பல் உடன் தொடர்பு இருக்கிறது என நிரூபித்தால் மும்பையை விட்டு செல்லத்தயார்: கங்கனா ரனாவத்

போதைக்கும்பல் உடன் தொடர்பு இருக்கிறது என நிரூபித்தால் மும்பையை விட்டு செல்லத்தயார்: கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தது. இது தவிர சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக டுவிட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்து வந்தது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்தார். மேலும், மராட்டிய மந்திரி ஒருவர் மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வாழ கங்கனா ரனாவத்திற்கு உரிமை இல்லை என்றார்.

இதற்கிடையே மத்திய அரசு அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மகாராஷ்டிர மாநில மந்திரி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் கங்கனா ரனாவத் ‘‘என்னை பரிசோதனை செய்ய வற்புறத்துவதில் மும்பை போலீஸ் மற்றும்  மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ஆகியோரை விட நான்தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். என்னுடைய தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்துங்கள்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக நீங்கள் கண்டுபிடித்தால், என்னுடைய தவறை எப்போதும் ஒத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். அதேபோல் மும்பையை விட்டு வெளியேறுகிறேன். உங்களை சந்திக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.