பிரேமலால் ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு- சற்றுமுன் வெளியான செய்தி

பிரேமலால் ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு- சற்றுமுன் வெளியான செய்தி

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜெயசேகரவை, நாடாளுமன்றம் செல்ல அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு தமக்கு அனுமதியளிக்குமாறு கோரி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் நகர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு குறித்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே அவரது சட்டத்தரணிகளால் இந்த நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனித கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட தமக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள போதும் அந்த தண்டனையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாம் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அந்த மனுவில் பிரேமலால் ஜயசேகர சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தெரிவான தம்மை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அழைத்து செல்வது சிறைச்சாலை அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேன்முறையீட்டை முன்வைத்துள்ள தமக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தமது மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.