திரையரங்கம் என்னாச்சு? முதல்வருக்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேள்வி

திரையரங்கம் என்னாச்சு? முதல்வருக்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேள்வி

நடிகர் விஜய்யின் திருமண நாளை ஒட்டி மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல் விஜய் மற்றும் சங்கீதாவை சித்தரித்து ஒட்டிய போஸ்டர் மிகவும் பரபரப்பானது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை தியேட்டர் திறப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்தே திரையரங்கு மூடியிருப்பதால் ஏப்ரலில் திரைக்கு வர வேண்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது.

 

கொரோனா பிரச்சனை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் இப்படம் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் தான் மாஸ்டரை பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

விஜய்யின் போஸ்டர்

தற்பொழுது தமிழக அரசின் அறிவிப்பில் தியேட்டர் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால், மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், விஜய் படத்தையும் பயன்படுத்தி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.

அதில், 'கொரோனா மறந்தாச்சு... இயல்பு நிலை வந்தாச்சு... திரையரங்கு என்னாச்சு?' என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.