சிறைச்சாலையின் கூரையை உடைத்து தப்பிச் சென்ற கைதிகள்: தேடுதல் பணிகள் தீவிரம்
குளியாப்பிடிய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நான்கு சந்தேக நபர்கள் சிறைச்சாலை கூரையை உடைத்து தப்பிச்சென்றுள்ளதாக குளியாப்பிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்புரபொல, கல்பொல, நாரங்கொட மற்றும் அலஹிடியாவ ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்தவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு குளியாப்பிடிய நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை குளியாப்பிடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இவர்களை கைது செய்யும் நோக்கில் வீதிகள் பலவற்றில் பொலிஸார் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.