மஹிந்தவை மண்டியிட வைக்கும் முயற்சியில் கோட்டாபய! புபுது ஜாகொட சர்ச்சை பேச்சு
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவின் மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மண்டியிட வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தேவை இருப்பது நன்றாக புலப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இடமளிக்காது 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றும் அதிகாரம் இந்த திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பயங்கரமான அதிகாரங்கள்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் இருந்தது. அதனையும் நீக்கியுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மக்கள் சிங்கத்தை எதிர்பார்த்தனர். நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்திற்கு பதிலாக எருமை கன்றை வழங்கியது. அந்த எருமை கன்றையும் தற்போதைய அரசாங்கம் பறித்துக்கொண்டுள்ளது.
ஜே.ஆர். செய்ததை விட மேலதிகமாக ஒன்றை செய்ய ஜீ.ஆர். முயற்சிப்பதிலேயே பிரச்சினை இருக்கின்றது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.