கடற்பரப்புக்குள் எண்ணெய் கசிவதற்கான வாய்ப்பு இல்லை..!

கடற்பரப்புக்குள் எண்ணெய் கசிவதற்கான வாய்ப்பு இல்லை..!

கிழக்கு கடல் பரப்பில் தீப்பற்றிய எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில் இருந்து, இலங்கை கடற்பரப்புக்குள் எண்ணெய் கசிவதற்கான வாய்ப்பு இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கடற்படையின் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கடற்படைக்கு சொந்தமான படகுகள், வான் படைக்கு சொந்தமான உலங்கு வானூர்திகள் என்பனவற்றைப் பயன்படுத்தி, தீணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்திய கடலோர பாதுகாப்பு படையும் தீயணைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இந்திய கடற்படையின் உலங்குவானூர்தியும், இலங்கை கடற்படையின் 3 படகுகளும் இந்த பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரையில் தீயணைப்பு பணிகளுக்காக, ஒரு இலட்சம் லீற்றருக்கு அதிகளவான நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றிரவுக்கு முன்னர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படையின் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீப்பற்றிய கப்பலில் இருந்து பாரியளவில் புகை வெளியேறி வருகின்ற நிலையில், அது எதிர்வரும் ஒரு வார காலப்பகுதி வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தீயினை அணைத்த பின்னரே கப்பல் பாதுகாக்கப்பட்டதா? என்பது தொடர்பில் கருத்து வெளியிட முடியும்.

இருப்பினும் இதனால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.