தமிழர்கள் விரும்பும் அரசியலமைப்பை நிறைவேற்ற கோட்டாபய அரசுக்கு ஆதரவு - யாழில் சுமந்திரன் அறிவிப்பு
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கும் என்று அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அந்த ஆதரவு புதிய அரசியல் சீர்திருத்தத்திற்கான ஆதரவாக இருக்குமே தவிர, அரசாங்கத்திற்கான ஆதரவாக அமையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாங்களாக ஒரு அரசாங்கத்தை கொண்டுவந்த போது கூட நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவளித்திருக்கவில்லை. ஆனால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாங்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கின்றோம். குறிப்பாக நகல் வரைபு கூட பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அதனை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வானது தமிழ் மக்களின் அபிலாசைகளை சந்திப்பதாக இருந்தால் நிச்சயமாக ஆதரவை கொடுப்போம். இதனை நான் பாராளுமன்றத்திலும் சொல்லியிருந்தேன்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக ஜனாதிபதி சொல்லியிருந்தார். நாங்கள் அரசியலமைப்பு வரைபுகளை செய்த போது குறித்த 3 விடயங்களை ஜனாதிபதியும் தனது உரையில் சொல்லியிருந்தார்.
ஆகவே திரும்பவும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இந்த நகல் வரைபை வைத்தே நாங்கள் தேவையான மாற்றங்களை கொண்டுவரலாம். இது தொடர்பாக சம்மந்னும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிரதமரை சந்தித்த போது, 3 இல் 2 பெரும்பான்மை கிடைக்காது. ஆனாலும் இதய சுத்தியோடு புதிய அரசியல் அமைப்பை கொண்டுவரும் போது, அது ஜனநாயக அடிப்படையிலான அரசியலமைப்பாக இருக்க வேண்டும். அதிலே தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலே ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அந்த அரசியல் சீர்திருத்தத்தை வரைவதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவை கொடுப்போம்.
எமது ஆதரவு அந்த செயற்பாட்டிற்கான ஆதரவாகவே இருக்கும். அரசாங்கத்திற்கான ஆதரவாக இருக்காது என்றார்.