வாகனங்கள் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்
அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உரிய வகையில் பராமரிக்கப்படாததன் காரணமாக தற்பொழுது பயன்படுத்தப்படாத பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அரசாங்க நிறுவனங்களில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியளவில் செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய 4,116 வாகனங்கள் மற்றும் ஒதுக்குவதற்கான 5,588 வாகனங்கள் இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக செப்பனிட்டு பயன்படுத்தக்கூடிய பயனுள்ள வாகனங்களை பழுது பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான நிதி இல்லாத சந்தர்ப்பத்தில் தேசிய வரவு செலவு திணைக்களத்தினால் அதற்கான நிதியை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செப்பனிடப்பட்ட வாகனங்களை, போதுமான வாகனங்களைக் கொண்டிராத அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சின் கீழ் உள்ள கணக்கு தணிக்கையாளர் நாயக அலுவலகத்தின் ஊடாக உரிய வகையில் வழங்குவதற்கும்,
செப்பனிட முடியாத வாகனங்களை ஏற்ற நடைமுறையைக் கடைப்பிடித்து ஒதுக்குவதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.