நியாயமாக நடந்து கொள்ளுங்கள்! பட்டதாரிகளிடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை

நியாயமாக நடந்து கொள்ளுங்கள்! பட்டதாரிகளிடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை

மக்களுக்கு சுமையாகாமல் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ளுமாறு நியமனம் பெற்றுக் கொண்டுள்ள பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'நாட்டுக்காக வேலை' கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள ரீதியாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களியுங்கள். அரச சேவைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுமையாகாமல் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ளுமாறு நியமனம் பெற்றுக் கொண்டுள்ள பட்டதாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, 50,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் 60,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. நேற்றைய தினம் 50,177 பட்டதாரிகள் அரச சேவையில் உள்வாங்கப்பட்டனர்.

அவர்களில் 38,760 பேர் பெண்களாவர். தொழில்களை பெற்றுக்கொண்டவர்களில் கலை பட்டதாரிகள் 31,172 பேர் உள்ளடங்குகின்றனர். வகைப்படுத்தலின் அடிப்படையில் உள்வாரி பட்டதாரிகள் 29,156 பேரும் வெளிவாரிப் பட்டதாரிகள் 20,322 பேரும் தேரர்கள் 1000 பேரும் இந்நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

ஏனைய பட்டதாரிகளில் வணிகத்துறை 1839, முகாமைத்துவம் 7278, விஞ்ஞானம் 4494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழிநுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1906 பேரும் அடங்குவர்.

இந்நிலையில் நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.

ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.