ஒரே நாடு - ஒரே சட்டம் கிடையாது! சர்வாதிகாரத்திற்குள் நகரும் கோட்டாபய

ஒரே நாடு - ஒரே சட்டம் கிடையாது! சர்வாதிகாரத்திற்குள் நகரும் கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொண்டு வந்து பாரதூரமான சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமை கொண்ட, தனது சகோதரரான, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஒட்டுமொத்த அரசியலமைப்பையே கோட்டாபய அரசாங்கம் மாற்ற முனைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

17ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதனை நிராகரிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சியில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்.

தற்போது 20ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியாகின்ற நிலையில் அதனூடாக கோட்டாபய அரசாங்கம் முழுமையாக கடந்த 2015ஆம் ஆண்டிற்கு முன் இருந்ததைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை நோக்கியே நகரப் போகின்றது.

19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சபையின் ஊடாகவே அனைத்து ஆணைக்குழுக்கள் உட்பட கட்டமைப்புகளுக்கான தலைமைத்துவங்கள் நியமிக்கப்பட்டன.

ஆனால் 20ஆவது திருத்தத்தில் அந்தப் பிரிவு நீக்கப்பட்டு அதன் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கரங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆகவே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வீடு செல்லும் வழியில் நீதியரசரை நியமித்ததைப் போல அரச கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் சர்வாதிகாரப் போக்கை இந்த அரசாங்கமும் கடைபிடிக்கப் போகிறது.

அதேபோல 19ஆவது திருத்தம் நீக்கப்படும் அதேவேளை, இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும் பிரயத்தனமே இதன் பின்னால் உள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் அல்ல, ஒரே சட்டம் ஒரே குடும்பம் என்கிற தொனிப்பொருள் தான் இன்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.