பலத்த பாதுகாப்புடன் சற்று முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையான பிள்ளையான்!

பலத்த பாதுகாப்புடன் சற்று முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையான பிள்ளையான்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

இதற்காக நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.