மகளை பார்த்ததும் மகிழ்ச்சி... எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் எழுதிய 3 வார்த்தைகள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.
எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95 சதவீத சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற் போது சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார்.
லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார். இவரின் இந்த எழுத்து குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.