இலங்கையின் கல்வித்துறைக்கு உதவ சீனா தயார்

இலங்கையின் கல்வித்துறைக்கு உதவ சீனா தயார்

நாட்டின் கல்வி மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில், மற்றும் டயர் தொழிற்சாலை செயற்றிட்டங்களில் உதவுவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதுவர் ஹுவெய்க்கும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையின் போது நாட்டின் கல்வித் துறை மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் எவ்வாறு உதவ முடியும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீன அரசிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உத்தேச திட்டமான கைத்தொழில் மற்றும் முதலீட்டு வலயங்களில் மருந்து உற்பத்தி மற்றும் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பிலும் அதற்கான மனித வள விருத்தியை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்மாணத்துறை மற்றும் வளங்கள் துறையின் திறன பிவிருத்தி அவசியம் தொடர்பில் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பில் இருவருக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் அது தொடர்பான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவது தொடர்பில் செயற்படுவதற்கு தாம் விருப்பமாக உள்ளதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார். அதன் அடுத்தகட்ட நடவடிக்கையான வீடியோ கலந்துரையாடல் மூலம் மேலும் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கிடையில் இணைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.