எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம்.. சுவாசமும் சற்று சீராகியுள்ளது: எஸ்பிபி சரண்

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம்.. சுவாசமும் சற்று சீராகியுள்ளது: எஸ்பிபி சரண்

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம் அடைந்து, சுவாசமும் சற்று சீராகியுள்ளது என்று அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

 

பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

 

 தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: 

 

முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதைச் சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன்.

 

 

 அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அப்பா பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

 

 உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்" இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.