தமிழர்களின் குரல் நாம் மாத்திரமே - வியாழேந்திரன் வீராப்பு

தமிழர்களின் குரல் நாம் மாத்திரமே - வியாழேந்திரன் வீராப்பு

கிழக்கு தமிழர்களின் பலமான குரல் தாம் மாத்திரமே என்று இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் துறைநீலாவணையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால் தான் வென்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம். நாம் யாரென்று மக்களுக்கு தெரியும்.

எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தளவிற்கு உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். இருக்க இருக்க எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதனடிப்படியில் ஆரோக்கியமான ஒரு அரசியலை நாம் இந்த மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த மாகாணத்திலே பல பிரச்சினைகளோடு, வேதனைகளோடு, சவால்களோடு இருக்கின்ற ஒரே ஒரு சமூகமென்றால் அது தமிழ் சமூகமாகத்தான் இருக்கும்.

இதை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எமது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு பிரதமரின் வழிகாட்டலில் நாங்கள் எமது மக்களை பாதுகாப்பதுடன், எமது பணிகளை நாடு பூராகவும் முன்னெடுக்கவுள்ளோம்.

2015ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம்.

அது அனைவருக்கும் தெரியும், அதனால் தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.