விக்னேஸ்வரனின் முதல் உரை தொடர்பில் இன்றும் கிளர்ந்தெழுந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

விக்னேஸ்வரனின் முதல் உரை தொடர்பில் இன்றும் கிளர்ந்தெழுந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமிழர் தாயகம் மற்றும் தமிழ் மொழி தொடர்பிலான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து இன்றைய தினமும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்தானது நாட்டில் இனவாதத்தை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளதாக ஆளும் கட்சி மாத்திரமன்றி எதிர்க்கட்சியும் இன்றைய தினம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மொழி தொடர்பில் வெளியிட்ட கருத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்றும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய சி.வி விக்னேஸ்வரன் ”உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும் எனது வாழ்த்தினை கூறுகின்றேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் இந்த கருத்தினை நாடாளுமன்ற ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிவிட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

எவ்வாறெனினும், ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமையுள்ளதாகவும், ஆகவே விக்னேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க முடியாது” எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் வெளியிட்ட கருத்துகள் நாட்டு மக்களிடையே விமர்சனத்தை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வெளியிட்ட கருத்துகள் இன்று நாட்டு மக்களிடையே விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துகளுக்கு நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. எனினும் அதனை ஏற்றுக்கொள்வது போல், செல்வம் அடைக்கலநாதனும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டில் இனக்கலவரத்தை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாமென நாம் கேட்டுக்கொள்கின்றோம். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. இந்த நாட்டில் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதோடு, அனைத்து இனங்களையும் சமமாக மதிப்பதோடு, எவரையும் குறைத்து மதிப்பிடுவது எமது நோக்கமல்ல என்பதை வலியுறுத்துகின்றோம்.

எனினும் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாக்குகளுக்காகவே இந்த கருத்துக்களை நீங்கள் வெளியிடுகின்றீர்கள் என எமக்குத் தெரியும் எனினும் இந்தக் கருத்துகள் மக்களிடையே முரண்பாடுகளையே தோற்றுவிக்கும். இதன் காரணமாக, தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு குரோதத்தையே ஏற்படுத்தும். ஆகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டாமென நாம் தெரிவிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தாயகம் தொடர்பில் கருத்து வெளியிட்டு சிங்கள மக்களை அவமதித்துள்ளதாக வலியுறுத்தினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார். அதற்கு கஜேந்திரகுமார் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். எனினும் தாயகம் தொடர்பில் இந்த சபையில் பேசி இனவாதத்தை பேசியதை எம்மை நீங்கள் அவமதித்ததாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் மிகப்பழமையான மொழியை பேசுவது தமிழ் மக்கள் எனக் குறிப்பிடுகின்றார். அவ்வாறெனின் இந்த நாட்டின் சிங்கள மக்கள் அதன் பின்னர் வந்த இனம் எனக் குறிப்பிடுகின்றார். எவ்வாறெனினும் இந்த நாட்டின் சிங்கள மக்களை குறைத்து மதிப்பிடவோ, அவ்வாறு செயற்படவோ இடமளிக்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தமிழர்களே இந்நாட்டின் பூர்வீகக்குடிகளென நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரன் ஆற்றியிருக்கும் உரை ஆதாரமற்ற அப்பட்டமான பொய் எனவும், தமிழர்களே பூர்வீகக்குடிகள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.