கிளிநொச்சியில் முன்னெடுக்கவுள்ள போராட்டம்! விடுக்கப்பட்டது அழைப்பு
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், குறித்த போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகசந்திப்பின் போது மேலும் தெரிவித்திருப்பதாவது,
பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த எமது தாய்மார் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று அறியாமலே பல தாய்மார் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை அரசின்மீது நம்பிக்கை இழந்துள்ளோம். அதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். சர்வதேசமே இலங்கை அரசின் மீது விசாரணை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.
எமக்கு அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை. நாளும் பொழுதும் அழுது கண்ணீர் இல்லாது போய்விட்டது. எமது வேதனைகளிற்கும் வலிகளிற்கும் சர்வதேசம் தலையீடு செய்து எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும். சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்காக எதிர்வரும் 30ம் திகதி வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த போராட்டங்கள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டங்களிற்கு வலு சேர்க்கும் வகையில் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பேரணிஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைய உள்ளது. இந்த நேரத்தில் ஒரு மணிநேரம் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனஊடக சந்திப்பின் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.