வத்தளை , ஹேகித்த, ஹெந்தலையில் சுத்தமற்ற உணவகங்கள் - PHI அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!
கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட வத்தளை, ஹேகித்த மற்றும் ஹெந்தலை ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடியான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் முறையான வகையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றதா என்பதோடு பயன்பாட்டிற்கு உகந்த உணவு உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக உணவு தயாரிக்கப்படாத பல உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டுள்ளன.
சுத்தமற்ற அப்பம் தயாரிப்பு, உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் சுத்தப்படுத்தப்படாமை, எலிகள் உண்ணும் வகையில் மரகறிகள், அரிசி, வகைகளை கஞ்சியப்படுத்தியிருந்தமை, பழுதடைந்த முட்டைகளோடு பயன்படுத்தவுள்ள முட்டைகளை களஞ்சியப்படுத்தியிருந்தமை, குளிர்சாதனப்பெட்டிகளை நீண்ட காலம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தியமை, கழிவு பொருட்களுக்கு அருகிலேயே சாதம், அப்பத்திற்குரிய மா கலவையினை வைத்திருந்தமை, குடிநீர் குவலைகள் சுத்தப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளன.
அத்துடன் காலவதியான பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றமை தொடர்பிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு உணவு தயாரிப்பில் ஈடுப்பட்ட உணவகங்கள் சிலவற்றுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் முத்திரையிட்டுள்ளதோடு, சில உணவு பொருட்களை முத்திரையிட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளனர்.
சில உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.