
அரசனை நம்பி புருசனை கைவிட்டநிலை - பட்டதாரிகள் கவலை
முறைசாரா தொழில்களிலிருந்து விலகி 'பட்டதாரி பயிலுனர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் தற்போது இரண்டும் இல்லாமல் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபை அமைச்சின் செயலாளருக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் தொடர்பான மகஜர் ஒன்று வவுனியா மாவட்ட அரச அதிபரூடாக இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தலுக்கு முன்பு பயிலுனர் பட்டதாரி நியமனங்கள் சம்பந்தமாக சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குமாறு ஒரு சங்கம் என்ற வகையில் நாங்கள் அரசாங்கத்தில் அதிகாரமுடையோரை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
2020 ஜனவரி 01ம் திகதி நியமனம் வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். பின்னர் ஜனவரி 15 எனக் கூறப்பட்டது. பின்னர் பெப்ரவரி கடைசி வரை பிற்போடப்பட்டது.
நியமனத்திற்கு தேர்தல்ஆணையம் எதிர்ப்பு வெளியிடுவதை அறிந்திருந்தும் பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதங்கள் தபால்மூலம் அனுப்பப்பட்டது. இறுதியில் நியமனம் வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியது.
அத்தருணத்தில் கூட தேர்தல் ஆணையத்தின் மீது பழியை போட்டுவிட்டு அதிகாரிகள் கை கழுவ முயன்றார்களேயன்றி பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கவில்லை.
இந்நிலையில் தகுதி பெற்ற குறிப்பிட்டளவு பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் கிடைத்திருக்கவில்லை என்பதுடன், ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டுடன் அரச நிர்வாக அமைச்சின் ஊடாக பகிரங்கப்படுததப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் பட்டியலில் கூட பல குறைபாடுகள் காணப்பட்டன.
நியமனக் கடிதங்கள் பெற்ற சில பட்டதாரிகளின் பெயர்கள் கூட அந்த பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்படாமையினால் அதுமுறையாக நடக்கவில்லை என்று தெரிகிறது.
நியமனக்கடிதங்களை தபாலில்
அனுப்பும்போது கூட இத்தகைய தவறுகள் நடந்துள்ளதை நாம் சுட்டிகாட்டியுள்ளோம். எனினும் குறித்த அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக விசாரித்தபோது, நியமனக் கடிதங்களை மூன்று முறை கவனமாக பரிசீலித்ததாக கூறினர்.
ஏற்கனவே தோன்றியிருந்த சிக்கலை சுட்டிக்காட்டி அவர்களது கூற்றை நிராகரித்தோம். எனினும், சகல பட்டதாரிகளுக்கும் உடனடியாக நியமனம் வழங்க முடியுமாயின். அவற்றை உடனடியாக வழங்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.
இதற்கிடையே, பட்டதாரிகளுக்கு மீண்டும் நியமனம் வழங்குவதாக 2020.04.07ம் திகதி பிரதமர் கூறியிருந்தார்.
அப்படியாயின், குறைந்தபட்சம், நியமனக்கடிதங்கள் வழங்கி பட்டதாரிகளை தொழிலில் இணைத்துக் கொள்வது தொடர்பாக அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் கலந்து பேசி இறுதி முடிவுக்கு வர வேண்டும்.
அவ்வாறன்றி, அரசாங்கத்தின் இப்படியான போக்குகளினால் பட்டதாரிகள் இடியப்ப சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
இத்தருணத்தில் மேற்படிவிடயங்களை கவனித்திலெடுப்பது மிகமுக்கியமானதென்பதை பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில் நாம் நினைவுபடுத்துகிறோம்.
சமீப காலமாக பல்வேறு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், அவற்றினால் பட்டதாரிகளுக்கோ, நாட்டிற்கோ எந்த நன்மையும் கிடைக்காதென்பது தெரிந்தபோதும், ஒரே விடயத்தையே திரும்பத்திரும்பசெய்து பட்டதாரிகளின் உயிரோடு அதிகாரிகள் விளையாடுகிறார்கள் என்பதை மீண்டும நினைவூட்ட விரும்புகிறோம்.
ஏற்கனவே தாம் செய்து வந்த தற்காலிக மற்றும் முறைசாரா தொழில்களிலிருந்து விலகி 'பட்டதாரி பயிற்சி'க்காக அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இறுதியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சிலருக்கு நியமனக் கடிதங்கள் கிடைத்துளள்ன. சிலருக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை. மேலும் சிலரது பெயர்கள் பகிரங்க பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலரது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சிலரது பெயர்கள் பட்டியலிலும் இல்லை. நியமனக் கடிதங்களிலும் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் அறிவிக்கும் வேலைத்திட்டம் என்ன என்பது குறித்து வினவ வேண்டியுள்ளது.
எனவே, தகுதிபெற்ற ஆனாலும் நியமனக்கடிதங்கள் கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு முன் நியமனக் கடிதங்கள் வழங்கி பயிற்சியை ஆரம்பிப்பது தொடர்பில் தேர்தல ஆணையமும், அதிகாரிகளும் கலந்து பேசி இறுதி முடிவிற்கு வரவேண்டும்.
சகல பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் பாரதூரமாகக் கருதி வேலையற்ற சலக பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கும் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமென நாம் அதிகாரிகளிடம் வேண்டுகிறோம் என்று குறித்த மகயரில்உள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் மாவட்ட செயலாளர்கள், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பபட்டுள்ளது.