முன்னேற்றம் குறித்து ஆராயுமாறு தெரிவிப்பு..

முன்னேற்றம் குறித்து ஆராயுமாறு தெரிவிப்பு..

1989 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 31 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயுமாறு மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் புதிய நோக்கத்துடன் செயற்திறன் மிக்கதான சேவை என்ற தொனிப்பொருளில் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு முதல் விவசாய அமைச்சர்கள், கல்வி அமைச்சர்கள் உட்பட பல்வேறு அமைச்சர்கள் 9 மாகாண சபைகளில் பதவி வகித்துள்ளனர்.

இதனூடாக நாட்டுக்கு செயற்திறன்மிக்க மாற்றம் ஏற்பட்டதா? என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், மாகாண சபைகளுக்காக இதுவரையில் ஒதுக்கிடப்பட்டுள்ள நிதி, அதனூடாக மக்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றம் என்பன தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அதனை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுசென்று. மாகாண சபை முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டுமா? அல்லது இரத்துச்செய்யப்பட வேண்டுமா? என்ற தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இதேநேரம், மாகாண சபைகளை இல்லாது செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் அரசாங்க தரப்பில் வெளியிடப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி வவுனியாவில் கூடுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயங்கள் குறித்த அதீத கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு வாரத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இந்த நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பதை தவிர்த்து, விரைவு நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து செயற்படுவது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் சந்தர்ப்பமாக அமையும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று சந்தித்துள்ளனர்.

கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர், பைசஸ் காசிம், எம்.எஸ்.தொளபீக் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் இந்திய உதவித் திட்டங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பனவும், அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.