மன்னாரில் யுவதி படுகொலை; வவுனியா விரைந்த விசேட பொலிஸ் குழு- தற்போது வெளியான தகவல்!

மன்னாரில் யுவதி படுகொலை; வவுனியா விரைந்த விசேட பொலிஸ் குழு- தற்போது வெளியான தகவல்!

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் வயது 21 என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்ட யுவதி , யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் மனைவி மற்றும் தாய் மாமன் ஆகியோர் மன்னார் சௌத்பார் புகையிரத வீதியை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த பகுதியில் சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, யுவதியின் சடலம் உப்பளம் பகுதியில் உள்ள பாத்தியில் வீசப்பட்டுள்ளது. எனினும் சடலம் 13 ஆம் திகதி காலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் , பதில் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுல பியதிஸ்ஸ ஆகியோரின் வழி நடத்தலில், உதவி பொலிஸ் பரிசோதகர் ஹங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் துரித கதியில் செயல்பட்டனர்.

இதன் போது பாடுகொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரி மற்றும் பெரிய தாயின் மகளின் மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தாய் மாமனார் தலைமறைவாகி இருந்தார்.

மன்னார் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பிரதான சந்தேக நபர் நேற்று வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த பிரதான சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.