இணைய சூதாட்டம்: விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யுமாறு வழக்கு!
இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்டத்தரணி கோரியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.