
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய பெருந்தொகை நிதி
பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியை பெற்றுக்கொடுப்பதற்கென மேலும் 116 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு எக்காரணத்திற்காகவும் பெற்றோர்களிடம் பண அறவீடு மேற்கொள்ளப்படமாட்டாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சகல பாடசாலைகளிலும் கட்டிலுடன் கூடிய ஓய்வறையொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்டுள்ள சகல சுகாதார ஆலோசனைகளும் பின்பற்றப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆலோசனைகள் சகல மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு, மாகாண ஆளுநர்கள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்குள் நுழைவது முதல் பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பும் வரையான நேரங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அதை தயாரித்துள்ளது. மேலதிக வகுப்புக்களை நடத்தும் சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படவேண்டிய சுகாதார ஆலோசனைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.