ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார்- கரு ஜயசூரிய

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார்- கரு ஜயசூரிய

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை வகிக்கும் சவாலை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை தற்போதைய தலைவர் உள்ளிட்ட கட்சியின் சிரேஸ் உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி முகங்கொடுத்துள்ள நிலவரம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி என்ற அபிமானமிக்க அரசியல் கட்டமைப்பு முகங்கொடுத்துள்ள நிலைமைகளில் இருந்து மீட்டெடுத்து கட்சிக்கு உரித்தான அதியுயர் இடத்தை மீண்டும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த பொதுத் தேர்தலில் பின்னர் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்தனர்.

அந்த வகையில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பல தரப்பினரால் தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாக பரிசீலிக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள தம்மால் முடியுமென முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் தற்போதைய கட்சி தலைமைத்துவம் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று 45 நிமிடம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக்கள் பறிமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொது தேர்தலின் பின்னர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்றம் ஆரம்பமானதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் கலந்துரையாட தயாராகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் உத்தியோகபூர்வமற்றது என எமது செய்தி பிரிவிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.