விமான போக்குவரத்து தொடர்பாக இலங்கை உட்பட 13 நாடுகளுடன் இந்தியா பேச்சு
பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக இலங்கை உட்பட 13 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந் நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே இந்த விமான பயண ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் Air bubbles எனப்படும் இரு தரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய மத்திய அரசின் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, இந்தியா, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சியில், 13 நாடுகளுடன் இருதரப்பு எயர் பப்பிள்ஸ் எனப்படும் விமான போக்குவரத்து திட்டத்தை செயற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகியவை இதில் அடங்கும் என்றும் அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.